Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் "உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்."ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.

அஃது, எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைத்தொடுகிறது.
 
இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.
 
அஃது, என்னையும் மற்றைய மனிதர்களையும் இணைத்துப் பொதுமைப்படுத்திப் பிணைக்கிறது.இஃது, எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது, பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில், புதியதைத் தோற்றுவிக்கிறது.எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு இதுவே!
 
 
இந்தவுலகு குறித்துப் பேசுவதற்கு எனக்கெதற்குக் கூச்சம்?
 
எப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.
 
உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.இந்த"நான்"அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான"நான்"சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் எழுதுவதில் முடிகிறது ஆயுள்.
 
"பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல
 
மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ..."
 
 



 
இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்...
 
புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் கௌரியினது பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.அது,"மக்கள் நலம்-ஏதாவது செய்தாகவேண்டும்"மெனப் போடும் கோலமும் புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும் வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை? மேலும்,"விரித்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது. இதுகூட ஒருவகையில் தேவைதாம். நெடுக, நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.
 
"ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்"
 
எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.
 
 
"மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!"
 
 
அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபவங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க...
 
இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.இன்று, இவைகளது அகண்ட கால்கள் வன்னி அகதி முகாமுக்குள் மக்கள் தலையில் எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.மக்களுக்கு,மக்களுக்கென சுவிஸ்சிலிருந்து புனையும் "ஈரனல்"ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு "துரோகி"சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?
 
உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!"எல்லாந்தெரிந்தவர்கள்"தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.
"ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு"
 
 
இவற்றைத் தவிர நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!
 
உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடியலைவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.
 
 
"கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்
கூடுவதும்,சேர்வதும் நாளைய விடியலுக்காவே
நமது கரங்களுக்கும் நட்பும்
தோழமையும் தெரிந்தே இருக்கிறது
சிந்தனைக்கு மையமாக
நாம் சிந்திப்போம்-எதைக்குறித்தும் கேள்வி கேட்டு."
 
 
குப்பறப் புரண்டவனின் வாரீசுகள் இன்றுவரையும் அகதியாகவும்,அடுப்பெரிக்க வக்கற்றவர்களாகவும் உலகெல்லாம் பிச்சையெடுப்பதைவிட ஊருக்குள்ளேயே கையேந்துகிறார்கள்.அகதியாக அலைந்து,ஐரோப்பியத் தெருக்களில் குப்பை பொறுக்கும் நம்மைக் காவு கொடுப்பதற்காகவே கடவுள் பெயரில் மதம்பரப்பிக் காசு சேர்ப்பவர்களோ,கட்டுக்கட்டாகக் கடவுள் பெயரில் சேகரிக்கும் பணம் நம்மைக் காவுகொடுத்துப் பையத்தியங்களாக்கிவிட்டு, தமது எஜமானர்களிடம் அரசியலைக் கொடுக்கிறது.நாம், மெல்லத் தொலைகிறோம்.
 
இனிமேலும்,தொலைந்து காணாமற் போவதற்குள்ளாவது எமது அடுத்த தலைமுறைகளை இவர்களிடமிருந்து காத்துவிடுவதில் மனது விருப்புறுகிறது.ஒரு பக்கம் கடந்தகாலத்து வாழ்வின்மீதான ஏக்கம் மறுபுறும் நிகழ்காலத்துக் கையாலாகாத வாழ்நிலை.இவற்றையுடைத்து மேலெழுவதற்கான எமது சந்திப்புக் கடந்த 26-27 ஆம் தேதி(26-27.09.2009) பிரான்சில் நிகழ்ந்தது.தோழமையோடு சந்தித்துக்கொண்ட இருபதுக்குட்பட்ட நம்மில் பலர், நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.கடந்தகாலத்து அநுபவங்கள்மீதான நமது விமர்சனங்கள் நம்மைக்குறித்துச் சுயவிமர்சனமாகவே அமைந்தது.இது, ஊக்கமிக்க செயற்பாட்டுக்கு உரமாகும்.
 
பாரீசின் ஏதோவொரு தெருவில் மிக எளிமையாகவும்,ஐரோப்பிய வாழ்நிலையோடு ஒப்பிடும்போது வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துவரும் தோழர் இரயாகரன். அவரை எண்ணும் போது எனது அகங்காரம்,திமிர்,நடத்தரவர்க்கக் குணமெல்லாம் கரைந்துபோகிறது(வருடத்துக்கு வருடம் வரும் புதிய கார்கள்மீது இச்சைகொண்டலையும் என் மனது, என்னைக் கேலி பண்ணுகிறது.காருக்காகக் கடனாளியாகிச் சுருங்கும் என் பையிலிருந்து வட்டிக்காகவே பல தாள்கள் போகின்றது.வாழ்வுக்கு எதுவரை வரம்பிட்டுக்கொள்ளலாம்?).
 
இப்படியும் மக்களுக்காகத் தமது வாழ்வை அற்பணித்த பல தோழர்களை நான் முன்னமே இழந்திருக்கிறேன்.அவர்கள்,மாற்றியக்க-இலங்கைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.காலம் ஏதோவொரு வகையில் மீளவும் உயிர்த்துடிப்புள்ளவர்களை எனக்குச் சமீபத்தில் அழைத்துவருகிறது.நாம்,உண்மையாய் உழைப்பது உயிர்த்திருப்பதின் முதற்படிதானே!எனவே,புத்துயிர் பெறுவதும்,அது குறித்துப் பேசுவதும் காலந்தாழ்த்தும் ஐரோப்பியச் சூழலை வெல்வதற்கே-அதுவும் அகதியச் சூழலை என்றால் நன்மையே.
 
"சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?" என்றேங்கிய பொழுதுகள் பல.
 
 
நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜகப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.

 


ப.வி.ஸ்ரீரங்கன்
03.10.2009