Language Selection

சம உரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.

 

 

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு துணையாக இருந்தார் என்ற குற்றஞ்சாட்டி செல்வநாயகம் கதீபன் அல்லது கோபி உட்பட மேலும் இருவர் கொலை செய்யப்பட்டதாக பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தது. கோபி உட்பட விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மேலும் 60 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 41 பேர் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளில் கைதுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதாக செய்திகளும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் பின்னர் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அரசாங்கம், தான் எதிர்பார்த்திராத முடிவுகளை சந்திக்க வேண்டிய நிலை கடந்த மாகாண சபை தேர்தலின்போது ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் தற்போதைய வடிவமாகிய நவதாராளமய முதலாளித்துவ தந்திரோபாயங்களை நாட்டில் செயற்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம், பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழும் உரிமையை நாளுக்கு நாள் அபகரித்துக் கொண்டிருக்கிறது.

 

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான தமது நெருக்கடியை மூடி மறைப்பதற்கு அடக்குமுறையைத் தவிர வேறு மாற்றீடு அவர்களிம் கிடையாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ, உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கோ வக்கில்லாத முதலாளித்துவ அரசாங்கம் அதன் காரணமா நாளுக்கு நாள் தம்மை விட்டு நழுவிச் செல்லும் மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைவது தொடர்பான செய்திகளை நிர்மாணித்து, தமது அரசியல் அதிகாரத் தேவைக்ககாக இனவாதத்தை வெளிப்படையாகவே அரங்கேற்றுகிறது.

 

உண்மையான பிரச்சினைகளை பின்தள்ளப்பட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறு பூராவும் இந்த பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டனர். இன்றைய நிலையிலும் அதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் தமது வாழும் உரிமையை அபகரித்துக் கொண்டிருக்கும் உண்மையான எதிரியை அடையாளம் காண்பதற்குப் பதிலாக இனவாத பிரிவினையை நிர்மாணித்து, போலி எதிரிகளையும் நிர்மாணித்து உண்மையை மறைக்க நாம் இடமளிக்கலாமா?

 

நாட்டில் பாரதூரமான மனித உரிமைகள் பிரச்சினை இருப்பது உண்மைதான். என்றாலும், மத்திய கிழக்கு உட்பட உலகின் அநேக நாடுகளில் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் ஏகாதிபத்திய நாடுகளினால் வழிநடத்தப்படும் மனித உரிமைகள் கவுன்ஸில் போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் பிரச்சினைக்கு தீர்வை எதிர்ப்பார்ப்பது வேடிக்கையாகும். உலகம் பூராவும் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக போராடும் எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மற்றும் அவர்களின் அமைப்புகளால் மாத்திரமே அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமே அல்லாது ஏகாதிபத்திய அமைப்புகளால் அல்ல.

 

இந்த முதலாளித்துவ ஆட்சியினால் தொடர்ந்து தொடுக்கப்படும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையின் எதிரில் தமது விடுதலையைத் தேடி இனவாதத்தின் பின்னால் அல்லது ஏகாதிபத்திய அமைப்புகளின் பின்னால் ஓடாது, கடத்தல், காணாமலாக்கல் மற்றும் அனைத்துவித அடக்கு முறைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுதலையடைய வேண்டுமாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் அடக்குமுறைக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக பரந்த அரசியல் போராட்டத்தோடு இணைய வேண்டும். அவ்வாறான பரந்த போராட்டத்தோடு கைகோர்த்துக் கொள்ளுமாறு இவற்றுக்கு எதிராக போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

ரவீந்திர முதலிகே

ஒருங்கிணைப்பாளர்

மக்கள் போராட்ட இயக்கம்