Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

பொறுக்கி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காலம்: 1940+, நாடு: இத்தாலி, பிரதேசம்: Sicily, கிராமம்: Giancaldo, அந்தக் குக்கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயமும், சினிமா அரங்கும் முக்கிய பங்கு வகித்தன. கிராமத்து மக்கள் இரண்டிலும் உயிராயிருந்தனர். சினிமா அரங்கும், தேவலயமும் கூட ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்பு வைத்திருந்தன.

Cinema Paradiso என்ற அந்த சினிமா அரங்கிற்கு வருகின்ற படங்களை கத்தோலிக்க பாதிரியார் தனியாகப் பார்த்து, முத்தம், அணைப்பு என்று ஆண்/பெண் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெட்டச் சொல்லி கையிலிருக்கும் மணியைக் குலுக்குவார். அரங்கத் தொழிலாளி Alfredo அவற்றைக் குறித்து வைத்து, படச்சுருளிலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை வெட்டிய பின்னே கிராமத்தவர்கள் படத்தைப் பார்க்கலாம்.

அந்தக் கிராமத்திலிருக்கும் Toto என்ற 6 வயசுச் சிறுவனுக்கு சினிமா ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. திரைப்படம் சுருளிலிருந்து திரைக்கு எப்பிடி வருகிறது என்று ஆராயப் போய் சினிமா அரங்கும், Alfredoம் அவனுக்கு உலகமாகிவிடுகின்றனர்.

இந்தத் திரைப்படம் Toto, Alfredo என்ற முக்கிய கதாபாத்திரங்களையே பிரதானப்படுத்தியிருந்தாலும், பcp16ல வாழ்வியல் விடயங்களை கதையோட்டத்தினூடு சொல்கிறது.

படத்தின் முக்கிய கருப்பொருள் சினிமா.

- தந்தையை இழந்த ஒரு சிறுவனுக்கும், குழந்தை இல்லாத ஒரு திரையரங்க ஊழியருக்குமிடையிலான உறவைப் பேசுகிறது.
- மதங்கள் கட்டிக்காப்பாற்றும் கலாச்சாரம்/ஒழுங்குகள் பற்றிப் பேசுகிறது.
- போரைப் பற்றிப் பேசுகிறது.
- சமூகத்தின் மனநிலையில் சினிமா ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசுகிறது.
- வறுமையில் கிராமத்தவர் கொண்டிருக்கும் நெருக்கமான உறவு/தொடர்பு பற்றிப் பேசுகிறது.
- பொருளாதார வளர்ச்சியுடன் கிராமத்துக்கேயுரிய கட்டமைப்பு உடைந்து சிதறுவது பற்றிப் பேசுகிறது.
- எளிமையான, யதார்த்தமான காதலைப் பேசுகிறது.

cp06சிறுவன் Totoவுக்கும், சினிமாவுக்கும் படத்தில் ஒரு ஒரு ஒற்றுமை இருக்கிறது. சிறுவன் வளர்கிறான். சினிமாவும் வளர்ச்சியடைகிறது.  சிறுவனில் பருவ மாற்றங்கள் வரும் நேரம் சினிமாவிலும் வருகிறது.

கிராமத்தில் மாற்றம் வரும்போது சினிமாவும் மாறுகிறது. சினிமா மாறும்போது கிராமத்திலும் மாற்றம் வருகிறது.

கால ஓட்டத்தில் திரையரங்கு கைமாறும்போது, பாதிரியாரின் தணிக்கை நிறுத்தப்படுகிறது. கிராமத்தவர் முதல்தடைவையாக முத்தக் காட்சிகளைப் பார்த்து பரவசமடைகிறார்கள். திரையரங்கிலேயே காதல் வருகிறது. குடும்பமாகிறார்கள். சிறுவர்கள் பதின்ம வயசுக்கு வருகின்றனர்.

தொடர்ச்சியான மாற்றத்தில், படுக்கையறைக் காட்சிகள் உட்பட ஆண்/பெண் நெருக்கமான காட்சிகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. திரையரங்கில் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு கையில் போடுகிறார்கள். திரையரங்கில் பாலியல் உறவு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்கும் திரையரங்கிலேயே ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

படத்தில் வரும் பல காட்சிகள் நீண்டகாலத்துக்கு மனசை விட்டுப் போகப்போவதில்லை. குறிப்பாக, கிராமம் வறுமை நிலையில் இருக்கின்ற காலத்தில் திரையரங்கின் முன்னாலுள்ள பெரிய வெளியில் வீடற்ற ஒருவன் வாழ்கிறான். அவனைப் பொறுத்த மட்டில் அந்தப் பெரிய வெளி அவனுக்குரிய, அவனது இடம். அந்த இடத்தால் போய் வருபவர்களுக்கும், அங்கு நிற்பவர்களுக்கும் இது என் இடம் என்று சொல்லுவான். பல வருடங்களின் பின் கிராமம் மாறுகிறது. திரையரங்கிற்கு முன்னாலிருந்த திறந்தவெளி கார்களால் நிரம்புகிறது. பாழடைந்த திரையரங்கு தகர்க்கப்படும்போது அவன் இது எனது இடமில்லை என்றபடி எங்கோ போய்விடுவான்.

cp03படத்திற்கான நடிகர்களின் தேர்வு பொருத்தமாக உள்ளது. வெஸ்ரேர்ண் படங்கள் மூலம் மட்டுமே எனக்குத் தெரிந்த Ennio Morricone தான் இந்தப் படத்திற்கு இத்தனை அமைதியான, கண்ணீர் வரவைக்கிற இசையமைத்திருக்கிறார் என்று அறிந்ததில் ஆச்சரியமே.

30 வருடங்களின் பின் தொலைக்காட்சி முக்கிய இடத்தைப் பிடிக்க, திரையரங்கு அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. போர்க்காலத்தில் வறுமையிலிருந்த ஊர் இப்போது பணம் சம்பாதித்துவிட, ஊரின் உயிர்ப்பான தோற்றம் மாறுகிறது. கார்கள் அதிகமாகிப் போய், கார் நிறுத்துமிடம் மேலும் தேவைப்படுவதால், கைவிடப்பட்ட திரையரங்கை நகரசபை தகர்த்து தரைமட்டமாக்குகிறது.  இதன்போது அந்த திரையரங்கோடு வளர்ந்து இப்போது நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் இருப்பவர்கள் மட்டும் தாங்க மாட்டாமல் அழுகிறார்கள். அவர்களுடன் 125 நிமிசங்கள் வாழ்ந்துவிட்ட எனக்கும்….

கூடவே நான் பிறந்து வளர்ந்த ஊரையும், அதன் ஞாபகங்களையும் இப் படம் கிண்டிக் கிளறிவிடுகிறது.

 

***

 

ஊரில் இருந்தபோது, பஸ் ஸ்ராண்டும், மதவடியும், சந்தித் தேத்தணிக்கடையும், மூலைச் சைக்கிள்கடையும், ரியூட்டறிக் கொட்டிலும், கோயில் பின்வளவும், சுடலை கிறிக்கற் கிரவ்ண்ட்டும், அடிக்கடி அரசிளங்குமரி ஓடும் தியேட்டரும்….. வெறும் இடங்களாக மட்டும் இருந்ததில்லை. அவைகளுக்கு உயிருண்டு. அவைகளிடம் நிறைய கதைகள் உண்டு. நண்பனின் தங்கச்சியை சுழட்டினதும், ஒளித்து சிகரெட் பிடித்ததும், பூச்சி நீந்தும் கள்ளைக்குடித்து சத்தியெடுத்ததும், சரோஜாதேவி வாசிச்சதும், பெற்குளோஸ் விளையாடினதும்… என்று ஊரிலிருந்த மனிதருக்கும், அசையும்/அசையாப் பொருட்டகளுக்கும் அப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கும். ஊருக்குத் தபால் கொண்டு வருபவரிலிருந்து, மூக்கு முட்ட கசிப்பு அடிச்சுப்போட்டு நடுச்சாமத்திலை தமிழில் இருக்கக்கூடிய அத்தனை தூசணங்களையும் அள்ளிவீசுபவர்வரை ஒரு உறவு இருக்கும்.

sl01இனி ஒருமுறை போகையில், அந்த மனிதர்களில் எத்தனை பேரைப் பார்ப்பேன், எந்த இடங்களைத் திரும்பவும் அடையாளம் காணுவேன் என்று நினைத்துப் பார்க்கையில் தொண்டையை அடைக்கிறது.

அந்த ஊர்களிலேயே இருந்து யுத்தத்தின் அத்தனை துன்பங்களையும் அனுபவித்து, உறவுகளை கண்முன் பறிகொடுத்து, வாழ்ந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைத்து அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்களுக்கு எப்பிடி இருக்கும்… என்றோ ஒருநாள் தமது இடத்தைத் தேடப் போகும்போது, அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட ஊர்களில் தரைமட்டமான கட்டிடங்கள், சரித்து விழுத்தப்பட்ட மரங்கள் மட்டுமல்ல, நிலத்தின்கீழ் எத்தனைபேர் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்று…

இதற்கு மேல் இது குறித்து எழுத முடியவில்லை.

http://porukki.weblogs.us/2009/06/21/cinema-paradiso/