Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில்,

அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.

இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் தத்தம் நோக்கில் கற்பனை உலகை தாமே படைத்து, அதை கைநீட்டி காட்டி அதுதான் விடிவுக்கான பாதை என்கின்றனர். ஒவ்வொருவரும் தாமாக கற்பனை பண்ணும் தமிழீழக் கனவுக்கு என்று, ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் கிடையாது. அதிலும் போராடுவதாக காட்டிக் கொள்ளும் புலிக்கும் இதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. புலிகளுக்கு தாம், தமது சொந்த நலன், இதைத் தாண்டிய எதுவும் அவர்களின் நலனாக இருப்பதில்லை. தமிழீழம் என்பது தமது சொந்த நலனை பூர்த்தி செய்யும் ஒரு கருவி மட்டும்தான். அதனால் தான் தமிழீழத்துக்கான அனைத்து சாத்தியமான வழியையும் நாசமாக்கி, அதை அழித்து, அதன் சாத்தியப்பாட்டை இல்லாததாக்கி வருகின்றனர். அவர்களின் அனைத்து செயற்பாடும் இன்று அப்படித்தான் மாறிவிட்டது.

இந்த நிலையில் இது அம்பலமாவதைத் தவிர்க்க, கற்பனை புனைவுகளை கொண்ட நம்பிக்கையையே வாழ்வாக விதைக்கின்றனர். எதார்த்தமான வாழ்வு சார்ந்த நம்பிக்கையை, ஒடுக்கப்பட்ட மனித போராட்டத்தை வாழ்வாக நிறுவிக் காட்டமுடிவதில்லை. வாழ்வுடன் சம்மந்தப்படாத கற்பனையின் விளைவால், இவர்கள் மோசமான மனநோய்க்கு உள்ளாகின்றனர். கனவையே வாழ்க்கையாக கொண்டு சம்பந்தமில்லாத வகையில் புலம்புகின்றனர். கற்பனையான கனவை உண்மையான எதார்த்தமாக காட்டி ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் அறிவாளி போல் முன்வைக்கின்றனர். இந்தக் கருத்தின் ஆயுள் மிகக் குறுகியதாக இருப்பதால், அவை உடனுக்குடன் அம்பலமாகின்றது. ஆனால் தமிழீழக் கற்பனை, பலரை அதற்குள் சுயமாக சிந்திக்கவிடாது பேயாக பிசாசாக ஆட்டுவிக்கின்றது.

புலித் தமிழீழம் ஒன்று, வரவே வரமுடியாது. அதற்குரிய அனைத்து சமூக அடிப்படையையும் அது தானாகவே இழந்து, இழிந்து சீரழிந்துவிட்டது. இதை நாம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்வோம்.

கற்பனையில் கனவாகவுள்ள எல்லைகளை அடிப்படையாக கொண்ட தமிழீழம் கிடைக்க வேண்டும் என்றால், இரண்டு பிரதான வழிகளில் மட்டும் சாத்தியமானது. இவ் இரண்டு வழிகளையும், புலிகள் எப்போதோ தமது சொந்த பாசிச வழிகளால் இழந்துவிட்டனர். ஒரு தனி அரசை உருவாக்கவும், அதன் நீடித்த இருப்பும் சில நிபந்தனைக்கு உட்பட்டது. குறித்த நிபந்தனையின்றி நாடுகள் அல்லது தனித்த பிரதேசங்கள் உருவாவதில்லை. ஒரு தனி அரசை உருவாக்கவும் பாதுகாக்கவும், நாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேச அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். இதில் இருந்து பிரிந்து யாரும் சுயாதீனமாக தனித்து வாழமுடியாது.

1. புலிகளின் பொருளாதார கொள்கை அடிப்படையிலும், அவர்களின் உடன்பாடான உலகமயமாதல் போக்கில், தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்பில் புலிகள் பெறவேண்டும். இதுவே முதலாவது வழி. அதாவது ஏகாதிபத்தியம் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்காவில் தம் மீதான தடையை நீக்க இலஞ்சம் கொடுக்கலாம், ஆனால் அங்கீகாரத்தை பெறவே முடியாது. அங்கீகாரம் என்பது சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு உட்பட்டது. புலிகள் போன்ற மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசக் குழுக்கள், அதை நினைத்தே பார்க்க முடியாது. எப்படி அல்கைதா அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து, இன்று அங்கீகாரம் பெறமுடியாத எதிரிகளாகி அழிப்புக்குள்ளாகின்றனர். இதேபோல் தான் புலிகளின் நிலையும். புலிகள் அமெரிக்காவின் நிதியையும் ஆயுதத்தையும் பல்வேறு அமெரிக்கா எஜண்டுகள் ஊடாக பெற்றது முதல், இஸ்ரவேலில் ஆயுதப் பயிற்சி அவர்கள் நாட்டிலேயே பெற்றநிலை இன்று மாறிவிட்டது. மாறாக அவர்களின் எதிரியாக புலிகள் இருப்பதை, அல்கைதவுடன் ஓப்பிட்டு நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நிலையில் ஒரு அங்கீகாரத்தை உலகமயமாதல் பொருளாதார நிபந்தனைக்குள் கிடைக்குமா என்ற கேள்வியை விடுத்து, அங்கீகரிப்பார்கள் என்று எடுத்தால், புலியை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். உலகமயமாதலை வழிநாடத்தும் ஏகாதிபத்திய நாடுகள், புலியை தடைசெய்து பயங்கரவாத குழுவாகவே கருதுகின்றது. அதாவது இந்த உலகமயமாதல் அமைப்புக்கு பாதகமான குழுவாகவே கருதுகின்றது. இது புலிகளின் பொருளாதார நோக்கில் இருந்தல்ல. இந்தநிலையில் உலகமயமாதல் அமைப்பில், ஏகாதிபத்தியம் புலிகளை அங்கீகரிக்கவே மாட்டாது. இந்த வகையில் உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்குள் தமிழீழம் சாத்தியமில்லை.

2. இரண்டாவது சாத்தியமான வழி என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை முற்றாக சார்ந்திருத்தலாகும். சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, அவர்களின் தலைமையில் ஒரு தேசிய பொருளாதார அமைப்பை கொண்டிருப்பதே அடிப்படையான நிபந்தனையாகும். இந்த வகையில் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருத்தல் நிபந்தனையாகும். குறிப்பாக சிங்கள முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை, அனுதாபத்தை பெற்றிருப்பது முக்கியமான அடிப்படை நிபந்தனையாகும். இந்த வகையிலும் தமிழீழம் சாத்தியமில்லை.

இப்படி இரண்டு வழிகளிலுமான புலித் தமிழீழ சாத்தியப்பாட்டை, அவர்கள் எப்போதோ இழந்துவிட்டனர். தற்போது அவர்கள் தங்களை பாதுகாப்பதே மிக முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதை அவர்களும் சரியாக உணரவில்லை, அதன் பின்னால் நக்கித் தின்னும் நாய்க் கூட்டமும் உணரவில்லை. ஆனால் எல்லா இராணுவ கட்டுமானங்களும், பிரமைகளும் ஒவ்வொன்றாக மெதுவாக இடிந்து வீழ்கின்றது. அது ஓரேயடியாக சரிந்து தூள்தூளாகிவிடுமா என்ற நிலைமையே, எதார்த்தத்தில் மிகமுக்கியமான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இது பெரும்பான்மையான சமூக அமைப்பில் இதுவரை உணரப்படவேயில்லை.

முன்னைய சோவியத்யூனியன் சரிந்து இடிந்து விழ முன், கே.ஜ.பி உலகளாவில் பலமான சதிகளையும் கட்டுமானங்களையும் உசுப்பியது போல், உலுப்பிக்காட்டவே புலிகள் முனைகின்றனர். அதனூடாக இடிந்து கொண்டிருக்கும் கனவை, நிமிர்த்திக்காட்ட முனைகின்றனர். பிழைப்புவாத இந்திய சுயநல அரசியல் செய்யும் பச்சோந்தி கோபாலசாமி முதல் நெடுமாறன் வரையிலான பிழைப்புவாதிகளுக்கு, பணத்தையும் சலுகைகளையும் கொடுத்து தமிழீழத்தையோ அல்லது புலியின் சீரழிவையோ தடுத்து நிறுத்தவே முடியாது. மேற்கில் அரசியல்வாதிகளுக்கு விருந்துகளையும், விமானத் ரிக்கற்றுகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து தமிழீழத்தைப் பெறமுடியாது. விடையங்களை பண உறவாக, இராணுவ வழியிலும் சிந்திப்பது செயலாற்றுவது, சொந்த அழிவின் விளிம்பில் அது பல்லிளித்து காட்சியளிக்கின்றது. இதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது போய்விடுகின்றது. அது சோரம் போன போக்கிரிகளின் சொந்த நலனுக்குள் முடங்கி விடுவதைத் தவிர, எதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தராது. ஒரு காலத்தில் இவை வெற்றிகரமான பலன் அளிப்பது போல் காட்சி அளிப்பது எப்போதும் தற்காலிகமானது. அது அதற்கென்று சொந்த விதியையும், நோக்கத்தையும் கொண்டது. அது உண்மையில் தொடக்கத்திலேயே கருவறுக்கும் தெளிவான அரசியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு, பெரும் ஏகாதிபத்தியங்களே இதை மறைமுகமாக ஊக்குவித்து உதவுகின்றன. இந்தியா புலிகளுக்கு விமானத்தை அழிக்கவல்ல விமான எதிர்ப்பு சாம் ஏவுகணையைக் கூட தனது ஏஜண்டுகள் மூலம் புலிக்கு விற்று, அதை செயற்படாமல் முடக்கிய வரலாறு 1987 இல் நடைபெற்றது. இதன் போது புலிகளின் பணம் முடக்கப்பட்டது மட்டுமல்ல, ஏவுகணையும் செயற்படவில்லை. இப்படி பல நிகழ்ச்சிகள் தெரிந்தும் தெரியாமலும் உள்ளது.

பணம், ஆயுதம் என்ற எல்லைக்குள் புலிகள், வெறும் மாபியாக் குழுவாக, பாசிசக் கும்பலாக சீரழிந்துவிட்டது. தனக்காக மட்டும், தன் நோக்கில் வன்முறையைக் கையாண்டு மேலும் ஆழமாக சீரழிகின்றது. இப்படி சீரழிந்து சிதைந்து கொள்கையும் கோட்பாடுமற்ற ஒரு கும்பல் தமிழீழம் அமைப்பார்கள் என்பதும், அதற்கு அலங்கரித்து நம்பிக்கை ஊட்டுவது குருட்டுத்தனமான அபத்தமாகும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு அடிப்படையையும் கடந்து, ஒரு தமிழீழத்துகான சாத்தியப்பாட்டை யாரும் முன்வைக்கவே முடியாது. இன்று இலங்கை பேரினவாத அரசாங்கம் முழுமையான பொருளாதார தடையைக் கொண்டு வந்தாலே, குறித்த புலிகளின் பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. விசித்திரமான ஆனால் எதார்த்தமான உண்மை இது. இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியருக்கான சம்பளம், அங்கு வாழும் மக்களுக்கான உணவு விநியோகத்தையும் நிறுத்தினால், புலியின் பிரதேசத்தில் அவர்களால் தொடர்ந்தும் நின்றுபிடிக்கவே முடியாது. இன்றும் யுத்த அகதிகளுக்கு, அரசு தான் இலவச உணவை அல்லது மலிவு உணவை வழங்குகின்றது. அதிலும் ஒரு பகுதியை மக்களுக்கு தெரியாது உறுஞ்சியும் அபகரித்தும் புலிகள் வாழ்கின்றனர். இப்படி பலவழிகளில் தான் புலியின் தேசிய பொருளாதாரம் நிறைவு செய்யப்படுகின்றது.

உலகில் கொரில்லா மண்டலங்களுக்கு, இலங்கையில் மட்டும் தான் உணவையும் சம்பளத்தையும் பேரினவாத அரசு கொடுக்கின்றது. வேறு நாடுகளின் கடந்தகால, நிகழ்கால போராட்டங்களின் போது, அரசு அதை முற்றாகமுடக்கி பட்டினிச்சாவில் தள்ளி போராட்டத்தை நசுக்கமுனைந்தன. இதை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சொந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதார தடையை எதிர்கொண்டனர். உண்மையான வெற்றிகரமான போராட்டத்தின் வரலாறுகள் இப்படித்தான், இந்த நிபந்தனையூடாகத்தான் நடந்தன.

இதற்கு புறம்பாக இலங்கையில் ஏன் இப்படியான நிலையை பேரினவாத அரசு கையாளுகின்றது. சுயமானதும் சுயாதீனமானதுமான மக்களைச் சார்ந்த போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதால் தான், தன்னைச் சார்ந்த சமூகப் பொருளாதார இருப்பை தக்கவைக்க அரசு, அவற்றை இடைவிடாது மட்டுப்படுத்தி வழங்குகின்றது. புனர் நிர்மாண பணத்தை வழங்குகின்றது. அரசுசாராத நிறுவனங்களின் நிவாரணங்கள் பாரிய அளவில் செயற்பட அனுமதித்துள்ளது. சொந்த தேசியப் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, தனிநாட்டுக்கான சுயாதீனமான தேசிய பொருளாதாரத்தை கட்டிவிடக் கூடாது என்பதால், பேரினவாத சுரண்டல் அரசு மிகக் கவனமாக திட்டமிட்டு புலியை சீரழிக்கும் வகையில் செயற்பட்டது. ஆனால் தேசியத்துக்காக போராடுவதாக கூறியவர்கள், அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்தே தீர்வோம் என்று கங்கணம் கட்டி, பாசிச ஆட்டம் போட்டனர். தேசிய பொருளாதாரம் கோரியவர்களை எள்ளி நகையாடி, அவர்களை கொன்றே போட்டனர். தேசிய பண்பில் இருந்து சீரழிந்து, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பாசிச எடுபிடிகளாகி, அதை சமூக உறவாகக் கொண்டு சீரழிந்தனர். இதை பேரினவாதம் தனது கொள்கை மூலம், புலிகளைக் கொண்டு வெற்றிகரமாக சாதித்தனர்.

இந்த நிலையில் முற்று முழுமையான பொருளாதார தடையும், கூலி மறுப்பும் சாத்தியமானதா என்றால், ஆம் சாத்தியமானதே. இதை உலகம் கண்டு கொள்ளாது. ஈராக் ஆக்கிரமிக்க முன்னம் ஏகாதிபத்தியம் எற்படுத்திய பொருளாதாரத் தடையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் கொல்லபட்டனர். இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சாத்தியமானதே. ஏன் அண்மையில் பாலஸ்தீன மீதான பொருளாதாரத் தடையும் அழுல் செய்யப்ட்டது. இப்படியொரு பொருளாதாரத் தடை கொண்டுவரப்படின், புலிகள் தமது கெரிலா பிரதேசத்தில் கூட நின்று பிடிக்கமுடியாது. அதற்கென்று எந்த சுயபொரளாதார சார்ந்த, சுய தேசிய வாழ்க்கை முறை எதையும் புலித் தேசியம் கட்டமைக்கவில்லை. ஏகாதிபத்திய பொருளாதாரதுக்கு இசைவான எலும்புப் பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்ட புலிப் பொருளாதாரம், எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் ஆற்றலற்றது.

இந்த நிலையில் தமிழீழம் வந்திட்டுது இந்தா பிடி, இந்தா வருது, பிடி பிடி, எட்டிப் பிடி என்று நம்பவைக்கின்ற புலம்பல்கள் மட்டும் ஓயவில்லை. இந்தப் பொய்யையும் கற்பனையும் வாழ்வாக கொண்ட கனவு காட்சிகள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த எதார்த்தமான சொந்தக் காட்சியை, அவர்கள் கண்ணை மூடிக்கொள்வதால் காண்பதில்லை.

இந்த கற்பனை தமிழீழவாதிகள் வலிந்து செய்யும் யுத்த கோமாளித்தனத்தால், உருவாகும் அகதிகளுக்கு ஒரு நேர உணவைக் கூட போட வக்கில்லாதவராகவே அவர்கள் உள்ளனர். தனி அரசுக்குரிய எந்த அடிப்படையுமற்ற நிலையில், எதைத்தான் சொந்தமாக சுய ஆற்றலுடன் மக்கள் சார்ந்து நின்று நிர்மாணிக்கின்றனர். குண்டுகளை வெடிக்க வைப்பதன் மூலம் மட்டும் தமிழீழம் வந்துவிடாது. கொல்வதால் மட்டும் தமிழீழம் வந்துவிடாது.

சரி, நீங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து, பலரைக் கொன்று போட்டு தமிழீழ எல்லைவரை பிடித்துவிட்டீர்கள் என்ற வைப்போம். என்ன நடக்கும். முதலில் சர்வதேச நிலையைப் பார்ப்போம்.

1. இந்தியா இதை ஒருநாளும் அனுமதியாது. ஒரு நாளுமே இதை அங்கீகரிக்காது.

2 .சர்வதேச நாடுகள் ஒன்றும் இதை அங்கீகரிக்காது.

3. சர்வதேச நாடு ஒன்று அங்கீகரிக்கின்றது என்று வைத்தாலும், இந்தியா அதை அனுமதிக்காது.

சர்வதேச நிலைமையை சாதகமாக மாற்றக் கூடிய, நிர்ப்பந்தம் கொடுக்கக் கூடிய வகையில், புலியின் சர்வதேச அரசியல் பாதகமாகவே உள்ளது. குறிப்பாக சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பது என்பது மட்டும் தான் குறைந்த பட்சம் ஒரு நிர்ப்பந்தத்தையாவது கொடுக்கமுடியும்.

மறுபக்கத்தில் எல்லைவரை பிடித்த பின், தமிழீழப் பிரகடனத்தை புலிகள் ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்யவேண்டும். இதன் மூலம் பேரினவாதத்தின் அனைத்து தொடர்பையும் இது இயல்பாக தானாகவே மறுதலிக்கும். முழுக்கமுழுக்க சொந்த நிர்வாகத்தை நிறுவவேண்டும. பேரினவாதிகள் கொடுத்த உணவையும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் புலிகளே கொடுக்க வேண்டும். இப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள, சொந்த தேசிய ஆற்றல் புலிகளிடம் கிடையாது. புலிகளால் சொந்த தேசிய கட்டமைப்பைச் சார்ந்து நிறைவு செய்யமுடியாது. இது தமிழீழத்தை பிரகடனம் செய்யாவிட்டாலும் கூட இதுதான் நிலைமை.

இதைவிட இன்று வடக்குகிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள், வடக்குகிழக்கு நோக்கி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகள், வேலைவாயப்புகள், அவர்களின் உணவுத் தேவைகளை பூர்த்திசெய்ய புலிப்பொருளாதாரத்தால் முடியாது. சர்வதேச ரீதியாக எந்த உதவி, எதுவும் வழங்கப்பட மாட்டாது. இது சர்வதேச விதிக்குட்பட்டது. சர்வதேச ரீதியான புலிகள் மீதான தடை, இதை மேலும் அனுமதியாது. புலம்பெயர் தமிழர்கள் உதவமுடியும் என்று சிலர் வாதத்துக்காக கூறலாம், இது சாத்தியமானதா என்ற கேள்விக்கு அப்பால், இதை அந்த நாடுகள் (ஏகாதிபத்தியங்கள்) அனுமதியாது. அது இன்று தொடர்ச்சியாக கடுமையாகவே தடைக்குள்ளாகி வருகின்றது. அதைவிட புலிகள் பணம் சேர்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இப்படி நிலைமை உள்ளது. சரி பணத்தை ஏதோ ஒருவழியில் புலிகள் பெறுகின்றார்கள் என்றால், பணப் பேப்பரை வைத்து உண்ணமுடியாது. அது உணவையும், அடிப்படைத் தேவையையும் உற்பத்தி செய்வதில்லை. அது வெற்றுப் பேப்பர் தான். மக்களின் உழைப்புத்தான் அனைத்தும்.

சிலர் புலி மாமா கதை சொல்வது போல், புலிக் கப்பல் பற்றி பேசுகின்றனர். இன்றைய சர்வதேச நெருக்கடியை தாண்டி (குறிப்பாக புலிகளின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு) இது தப்பிப்பிழைக்க வேண்டும். அப்படி எல்லாம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்ந்தாலும், இந்தியாவின் தீவிர கண்காணிப்பை தாண்டி இலங்கையில் உட்புகுவது என்பது முயல் கொம்புதான். அப்படி ஒரு இரு கப்பலை கொண்டு போனாலும், அந்த கப்பலில் எத்தனை பேருக்கு எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு போகமுடியும்? இப்படி இதற்குள் நிறைய கேள்வி உண்டு. மக்கள் எலியையெல்லாம் பிடித்து தின்று முடிய, புலியைத்தான் பிடித்து தின்னும் நிலைதான் உருவாகும்.

சரி தமிழீழத்தை அங்கீகரித்து ஒரு நாடாக உருவாகிவிட்டது என்று எடுப்போம். பிறகு என்ன நடக்கும். வெற்றுக் காற்றில் ஊதிச் சாப்பிடமுடியாது. சிலர் தேசியப் பொருளாதாரம் பற்றி பீற்றுகின்றனர். ஏற்றுமதி பற்றியெல்லாம் கதைக்கின்றனர். மீPன் பிடி என்கின்றனர். உப்பு உற்பத்தி என்று இப்படி பலவற்றை குறிப்பிடுகின்றனர். மீனை விற்று உணவை பெற முடியுமா? எந்தனை தொன் மீனை விற்று, எத்தனை தொன் உணவை வாங்குவது? இது எத்தனை பேருக்கு போதும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நம்பி தேசத்தை தேசியத்தை நிர்மாணிக்க முடியாது. புலம்பெயர் தமிழன் முதலீடு பற்றி பீற்றப்படுகின்றது. முதலில் புலியை நம்பி அவர்கள் வரவேண்டும். மறுபக்கதில் புலம்பெயர் முதலீடு என்பது வெறும் டப்பாதான். புலம்பெயர் தமிழரின் இன்றைய வர்த்தக முயற்சிகளில் 90 சதவீதமானவை பாரிய கடன் நெருக்குவாரத்துக்குள் உள்ள வெற்று டப்பாதான். சொந்த தேசத்தை, தேசியத்தை சொந்தமாக நிர்மாணிக்க முடியாதவர்களின், வெற்று கருத்துகளும் புலம்பலும தான் இவை. தமது வெற்றுத்தனத்தை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதும், புலிகளின் சமூகக்கூறுகளில் இருந்து அன்னியமாகி நிற்கின்ற ஒரு நிலையில், தன்னியல்பாக சுயவிளக்கமளித்து இப்படி தானே தனக்குள் நம்புவதே இதன் சாரமாகும். உண்மையில் இவையெல்லாம் வெற்று வேட்டுத்தனம்.

புலித்தேசியத்தில் வாழும் மக்கள், பொருள் சார்ந்த கனவில் வாழ்பவர்கள் தான். ஆடம்பரமான கனவுகளும் வேட்கைகளையும், பொருள் சார்ந்த உலக பார்வையையும் புலித்தேசியத்தால் ஈடுசெய்ய முடியாது. புலிக் கப்பல் உணவுக்கு பதில் கொக்கோகோலாவைத் தான் கொண்டுவந்து இறக்கவேண்டிய பரிதாபநிலை. இதுதான் தமிழனின் வாழ்வு சார்ந்த கண்ணோட்டமாகும். புலித்தேசியம் பன்னாட்டு ஆடம்பர பொருள் சார்ந்ததே ஒழிய, மக்கள் சார்ந்ததல்ல.

ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் சொந்தப் பொருளாதார நலன்களை, கீழ் இருந்து கட்டாத வரை தேசியம் என்பது சாத்தியமற்றது. இன்று காணப்படும் பிற்போக்கு பண்பாட்டை கலாச்சாரத்தை மறுதலித்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததாக முன்னெடுக்காத வரை, ஒரு கெரில்லா பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. பேரினவாதம் தொடர்ந்தும் உணவையும் கூலியையும் வழங்குவதால் மட்டும் தான், புலிகள் இன்னமும் அங்கு புலிகளாக நீடிக்க முடிகின்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வதும், மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதை எதிர்மறையில் புரிந்து கொள்வது, இன்றைய காலத்தின் தேவை மட்டுமின்றி அவசியமான நிபந்தனையுமாக உள்ளது. (காலப்பொருத்தம் கருதி ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீளவும் வெளியிடப்படுகின்றது)

பி.இரயாகரன்
07.09.06